பெங்களூரு

விரைவில் கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட பாடநூல் மறு ஆய்வுக் குழு, மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த புரட்சிகர எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், பி.லங்கேஷ், தேவனூர் மகாதேவா, நாகேஷ் ஹெக்டே ஆகியோரின் படைப்புகளையும், சீர்திருத்தவாதிகள் சாவித்திரி பாய் பூலே, பெரியார் உள்ளிட்டோர் குறித்த பாடங்களையும் நீக்கியது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம், கர்நாடக மாநில பள்ளிக்கல்வி திட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.

பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகப் பேராசிரியர் மஞ்சுநாத் தலைமையில் பாடநூல் மறு ஆய்வுக் குழுவைக் காங்கிரஸ் அரசு அமைத்தது. இதன்படி அரசியல் அமைப்பு, பாலியல் உணர்திறன், குழந்தைகள் உரிமைகள், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த குழு ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பித்தது.

தீவிர சீர்திருத்தவாதிகளாகப் பார்க்கப்படும் சாவித்திரி பாய் பூலே, பெரியார் ஆகியோரின் பாடங்களை மீண்டும் சேர்க்கக் கர்நாடக கல்வித்துறைக்கு ஆய்வுக்குழு அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. இதில் குறிப்பாக பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூகப் பணிகள் குறித்த பாடத்தை 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பரிந்துரையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியார் குறித்த பாடத்தைக் கர்நாடக கல்வித்துறை சேர்க்க உள்ளது. வரும் கல்வி ஆண்டில் இந்த பாடங்கள் பள்ளி புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.