உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு முன்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பற்றி யாரும் பெரிதாக மதிப்பிடவில்லை என்றே கூறலாம்.

கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளே பலரின் கணிப்பிலும் இடம்பெற்றன. பல்வேறு நிர்வாக நெருக்கடிகளில் சிக்கியிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றே கூறலாம்.

ஆனால், போட்டிகள் தொடங்கிய பிறகு பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது அந்த அணி.
பாகிஸ்தானுடன் ஆடிய ஆட்டத்தில் மிரட்டிய அந்த அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் கலக்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட அணி, சில தேவையற்ற தவறுகளால் தோற்றது என்பதே உண்மை.

அந்த அணியின் வீரர்கள் புதிய உற்சாகத்துடனும், துடிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் ஆடி வருகின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

தன்னுடைய சிறப்பான செயல்பாட்டின் மூலம், உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.