டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், தமிழக அரசு கவர்னருக்கு ஆலோசனை வழங்கக்கூடாதா என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடை பெற இருந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டால் குண்டு வெடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய, கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், மத்திய அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுபோல மாநில கவர்னரும், தமிழகஅரசின் மனுவுக்கு பதில் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.
இதையடுத்து தன்னை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கவர்னர் பன்வாரிலாலுக்கும் பேரறிவாளர் தரப்பில் கருணை மனு வழங்கப்பட்டது. ஆனால், அவரது கருணை மனுமீது கவர்னர் பன்வாரிலால் இதுவரை எந்தவொரு முடிவும் தெரிவிக்கவில்லை. எப்போதும் போல அமைதியாக இருந்து வருகிறார்.
இதையடுத்து ராஜீவ் கொலைகைதிகள் 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்ச கத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உள்ளதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்தி வெளியானது. மேலும், மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, பேரறிவாளர் தரபிப்பில் உச்சநீதிமன்றத்தில், தனது கருணை மனு மீதான கவர்னர் முடிவை அறிவிக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. மனுவில், ஆளுநரின் முடிவை அடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழகஅரசு முடிவு செய்யும் என்றும், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லாததால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பேரறிவாளன் கருணை மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கவர்னர் தரப்பில் கூறப்படும் தகவல் சரியல்ல என்று அதிருப்தி தெரிவித்ததுடன், எம்டிஎம்ஏ இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு தெளிவுபடுத்தியதா என்று கேள்வி எழுப்பியதுடன், பேரறிவாளன் கருணை மனு விவகாரத்தில் ஆளுநர் ஏன் தாமதப்படுத்துகிறார் ? ஆளுநருக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லையா ன்ற நீதிபதிகள், தமிழக அரசு அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சட்டப்படியான முடிவுகளை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை வருகிற 23ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.