சென்னை,
நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை உருவாகி இருப்பது தற்போதைய இடைத்தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது என்ற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் பரோல் மேலும் நீடிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக காங்கிரசுக்கு இதுவரை 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை 50 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தனது உடல்நலமில்லாத தந்தையை காண ஒரு மாதம் பரோலில் வெளியே வந்ததார். பின்னர் அது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இனிமேலும் அவரது பரோல் நீட்டிக்கக்கூடாது என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
மோடி அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் மக்களிடையே அதிருப்தியும், மனச்சோர்வும் தான் ஏற்பட்டுள்ளது. இது தற்போது முடிவடைந்த பஞ்சாப், கேரளா, இடைத்தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தென் கோடியில் இருந்து வடகோடிவரை மோடிக்கு எதிரான அலை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெறும். ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் ஆவார் என்பது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.