அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்

ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்கவே விழித்தபோது, பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவலிங்கத்தை தேவர்கள் பூஜித்ததைக் கண்டான். ஆச்சர்யமடைந்தவன், மறுநாள் மன்னன் பராந்தகசோழனிடம் தகவல் தெரிவித்தான். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் இங்கு வந்தனர். இலிங்கம் இருந்த இடத்தைத் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது, கையில் கரும்புடன் அங்கு வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம், தான் சிவனின் இருப்பிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் இலிங்கத்தை காட்டிவிட்டு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின் மீது முதியவர், கையில் கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், மலையில் முருகனுக்கும், இலிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான். சிவன் ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரராகக் காட்சி தருகிறார்.

கயிலாயத்தில் சிவன் பார்வதி இருக்கும்போது சூரன்முதலிய அரக்கர்கள் தொல்லை குறித்து தேவர்கள் முறையிடுகின்றனர். அப்போது அங்கிருக்கும் முருகப்பெருமான் அவர்களை தான் அழித்துவிட்டு வருவதாக தனது தாயார் பார்வதி தேவியிடம் கூறி, அவரது கையில் உள்ள சக்தி வேலை வாங்கி செல்கிறார். அசுரர்களை சூரசம்காரம் செய்கிறார். பின்பு சூரசம்காரம் முடிந்ததும் தன் வெற்றியைத் தெரிவிக்க தனது அம்மாவிடம் வருகிறார். தன் வெற்றியை தன் அன்னையிடம் தெரிவிக்கிறார். தன் மகன் பெற்ற வெற்றியை பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டார் பார்வதிதேவி. இந்த வெற்றியின் அடையாளமாக தனது கையிலிருந்த கரும்பை முருகனுக்கு பார்வதி தேவி பரிசாக வழங்கினார். அதை வாங்கிக் கொண்டு முருகப்பெருமான் இம்மலையில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

வளம் மிகு செட்டிகுளம் மலைமீது கோயில் கொண்டுள்ள முருகன், அகத்திய மாமுனிவருக்கு வளையல் செட்டிவடிவாக இத்தலத்தில் காட்சி தந்தாராம். கண்ணகியின் கடும்சினத்தை தணித்து சிறுவாச்சூரில் மதுரகாளியாக அமர ஆற்றுப்படுத்தியதும் இவரேயாம். இத்தலத்து முருகப்பெருமான் பழநியில் இருப்பதைப் போன்று இங்கும் மலைமீது தண்டாயுதபாணியாக காட்சி தருவதால் இத்தலம் வடபழநி எனவும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள முருகன் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தி என்பது முக்கியமான சிறப்பம்சம்.

மலை மீது சுணை உள்ளது. அதற்கு தேனருவி என்று பெயர் இந்த சுணை வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் இருக்கும். மழைக் காலத்தில் பெய்யும் மழை நீர் எல்லாமே மலையிலுள்ள மூலிகை மரம் செடி கொடிகளுக்கு இடையில் ஒடி வந்து கீழே உள்ள பஞ்ச நதிக்குளத்தில் விழும். எனவே இத்தலத்தில் குளிப்பவர்கள் பிணி நீங்கப்பெறுவர். பழநிக்கு நேர்ந்து கொண்டவர்கள் இத்தலத்தில் நேர்த்திகடனை செலுத்தலாம். அகத்தியர் வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம்.

240 படிகளுடன் உள்ள மலை மீது அமைந்த கோயில் இது. வழக்கமாக வேலுடன் காட்சி தரும் முருகன் இங்கு, கரும்புடன் காட்சியளிக்கிறார். அலங்காரத்தின்போது மட்டும் வேல், சேவல் கொடி வைக்கின்றனர். தலையில் உச்சிக்குடுமியும் உள்ளது. உற்சவர் கையில் வேல் இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு தடிமனாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதைப்போலவே, நாமும் பார்ப்பதற்கு கரடு முரடானவராகத் தெரிந்தாலும், நற்குணம் கொண்ட நல்ல மனம் என்னும் இனிய சாற்றை கொண்டிருக்க வேண்டுமென்பதை இவர் உணர்த்துகிறார்.

மலையடிவாரத்தில் விநாயகர், பாதை நடுவே இடும்பன், கோயில் வளாகத்தில் ராஜகணபதி, வீரபாகு சன்னதிகள் உள்ளன. முருகனின் படைத்தளபதி வீரபாகு இங்கு வீரபத்திரசுவாமியாக விளங்குகிறார். மாசி 3,4,5 தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளி சுவாமி மீது விழும். அப்போது சூரியன் அஸ்தமனம் ஆக ஆக சுவாமியின் பாதத்திலிருந்து முகம் வரை சூரிய ஒளிக்கதிர்கள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே வரும்.

வேண்டுதல் :

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டியன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பங்குனி உத்திரத்தன்று, கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி, கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விவசாயிகள், விவசாயம் செழிக்க இவரிடம் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். தங்கள் நிலத்தில் முதலில் விளைந்த தானியம், பழம், காய்கறிகளை முருகனுக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் – 10 நாட்கள் திருவிழா – மண்டகப்படி – தேர்த்திருவிழா – தினந்தோறும் வாகனங்களில் சுவாமி வீதியுலா.

தைப்பூசம் – தேர்த்திருவிழா – 10 நாட்கள் திருவிழா சித்திரை முதல் தேதி – படிவிழா. எல்லாப்படிகளுக்கும் விளக்கு பூஜை நடைபெறும். வைகாசி விசாகம் – சங்காபிசேகம் – சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெறும்.

ஐப்பசி சஷ்டி 7 நாட்கள் அபிசேக விசேசம் நடைபெறும். அப்போது நடக்கும் லட்சார்ச்சானை மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை அன்றும் பூஜை நடைபெறும்.

கோரிக்கைகள்:

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இத்தலத்து முருகனை வணங்குவோர்க்கு நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணமாற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியன நீங்குவதால் இத்தலம் சிறப்பு பெற்று வருகின்றது. படி ஏறி வந்து முருகனை வழிபடுவதால் கை கால் சுகம் பெறுகிறது. மேலும் இத்தலம் மலைக்கோயில் என்பதால் மலையில் உள்ள மூலிகை காற்றை சுவாசித்துக் கொண்டே பக்தர்கள் செல்லும்போது தங்கள் உடம்பில் உள்ள பல நோய்கள் விலகுகின்றன.

நேர்த்திக்கடன்:

முடி காணிக்கை, காவடி எடுத்தல், துலாபாரம் செய்தல், ஆடு, மாடு, கால்நடைகள் காணிக்கை போன்றவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக தருகின்றனர். குழந்தை வரம் வேண்டியவர்கள் தாங்கள் வரம் கிடைக்கப்பெற்றவுடன் கரும்புத் தொட்டில், கரும்பு காவடி கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வெள்ளி வேல் செய்து வழங்குகின்றனர். உண்டியல் காணிக்கையும் உண்டு. பால் தயிர், இளநீர், எலுமிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம் அபிசேகம், தைலம் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்கின்றனர். சஷ்டி அன்று கலசாபிசேகம் செய்கின்றனர். இத்தலத்தில் சண்முக ஹோமம் செய்வது பக்தர்களால் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த நேர்த்திக்கடன் ஆகும். அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்