திஸ்புர்:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மத்தியஅரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டு வன்முறை பரவி வருகிறது. பல இடங்களில்  தீ வைக்கப் பட்ட நிலையில், பாஜக தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக  இணையதள சேவையை மத்திய அரசு முடக்கி உள்ளது. மேலும் வன்முறையை ஒடுக்க  ராணுவத்தினரை குவித்து வருகிறது.  இது அம்மாநில மக்களிடையே பதற்றத்தையும், கோபத்தையும்   ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவில், ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான  மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.

இது, மதநல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும்,  மதவாத செயல் என்றும், காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமான அசாம் மாநிலத்தில், பெருவாரியாக மக்கள்  பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், சாலைகளில் மறியல் செய்தும், வாகனங்களை தீயிட்டு எரித்தும் மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

திபுகார்க்கிலுள்ள அசாம் முதல்வர் சர்பாணந்தா சோனவால் வீட்டை நேற்றிரவு முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், வீட்டின் மீது கற்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அசாமின் கவுகாத்திக்கு செல்லும் மூன்று விமானங்களை ஏர் இந்தியா மற்றும் இன்டிகோ நிறுவனங்கள் ரத்துசெய்து, அதற்கான கட்டணத் தொகையை திருப்பி அளித்துவிடுவ தாக உறுதியளித்துள்ளது.  ரயில் மறியல் போராட்டம் நடந்ததால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் அசாம் மாநிலத்தின் 10 மாவட்டங்கள் முழுவதும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக ஐந்து கம்பெனி ராணுவ வீரர்களை மத்திய அரசிடமிருந்து அசாம் மாநில நிர்வாகம் கோரியுள்ளது. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், வகையில் அசாம் மற்றும் திரிபுராவில் ஆயிரக்கணக்கான ராணுவ படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய அரசின் மீதான அம்மாநில மக்களின் ஆத்திரம் இன்னும் அதிகரித்துள்ளது.