அமைதியாக உட்கார்ந்திருப்பதை சட்டம் ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட பெண்கள் தங்கள் கணவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் கேட்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 125 (வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் மற்றும் பாதுகாவலர்களுக்கான பராமரிப்பு உத்தரவு) வாழ்க்கைத் துணைவர்களிடையே சமத்துவத்தைப் பேணுவதையும், வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் மற்றும் பாதுகாவலர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதிபதி சந்திரதாரி சிங் மார்ச் 19 அன்று தனது உத்தரவில், ‘அமைதியாக உட்கார்ந்திருப்பதை’ சட்டம் ஊக்குவிக்காது என்று கூறினார்.

விவாகரத்து பெற்ற கணவரிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த கோரிக்கையை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மனுதாரர் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின் தனது கணவருடன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த நிலையில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொல்லையால் 2021 பிப்ரவரி மாதம் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அதற்காக தனது நகைகளை விற்றதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

2021 ஆம் ஆண்டில், அவர் தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார். விசாரணை நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்ததை அடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

மனுதாரர் வேலையில்லாமல் இருப்பதாகவும், வருமானத்திற்கான ஆதாரம் இல்லை என்றும் விவாகரத்து பெற்ற கணவர் நன்றாக சம்பாதிக்கிறார் என்றும் இந்த வழக்கில், விண்ணப்பத்தை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கை தவறானது என்று அந்தப் பெண் வாதிட்டார்.

ஆனால் மனுதாரர் மிகவும் படித்தவர் என்றும் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர் என்றும் கணவர் வாதிட்டார். மேலும், வேலையின்மையைக் காரணம் காட்டி ஜீவனாம்சம் கேட்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த, லாபகரமான தொழிலில் இருக்கும் ஒரு பெண், தன் கணவரிடமிருந்து பராமரிப்பு பெறும் நோக்கத்துடன் சும்மா இருக்கக்கூடாது.” எனவே, இந்த வழக்கில் இடைக்கால ஜீவனாம்சம் ஊக்குவிக்கப்படவில்லை.

“மனுதாரர் தான் பெற்ற கல்வியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், சம்பாதிக்கவும் கூடிய திறன் கொண்டவர் என்பது இந்த நீதிமன்றத்திற்குத் தெளிவாகத் தெரிகிறது” என்று நீதிபதி சிங் தனது உத்தரவில் கூறியதுடன் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.