டில்லி

காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அனிமேஷன் வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள கடும் போராட்டம் நடத்தி வருகிறது.  ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அனைத்து தொகுதிகளிலும் பொது வேட்பாளர்களை நிறுத்தி பாஜகவைத் தோற்கடித்து வீழ்த்த ஒன்று சேர்ந்து யூகம் வகுத்து வருகின்றன.

தேர்தலையொட்டி இணையத்திலும் பிரச்சார போட்டிகள் அரங்கேறி வருகின்றன.  முதலில் பாஜக வெளியிட்ட அனிமேஷன் வீடியோவில் பிரதமர் மோடி பாஜக கூட்டணி அரசை வழி நடத்தி சமூகத்தின்  பல்வேறு தரப்பினருக்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்றி நாட்டின்  பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு மாற்றுவதாகக் காட்டப்பட்டது.

இது பாஜகவின் வழக்கமான பிரச்சாரம் என்பதால் மக்களை அதிக அளவில் கவரவில்லை.   

காங்கிரஸ் கட்சியும் மொகபத் கி துகான் (அன்புக் கடை) என்னும் தலைப்பில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிட்டுள்ளது.   சுமார் 1.43 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.  இந்த வீடியோவில் மோடி ஒரு சாரட் வண்டியை ஓட்டுகிறார். அதில் ஜனநாயகம், ஊடகம், அரசு அதிகார வர்க்கம், சங்கிலியால் கட்டிப்போடப்பட்டுள்ளது.  இதே வீடியோவில் அமைச்சர் அமித்ஷா இந்து முஸ்லிம்களைப் பிளவு படுத்துவது  போலவும் காட்டப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாகத் திகழ்ந்ததாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  அப்போது பின்னணியில் ராஜ் கபூர் நடித்த ‘அனாரி’ படத்தின் “கிஸி கி முஸ்குராஹட்டான் பே ஹோ நிசார்” என்ற பாடல் ஒலிக்கிறது.  பிறகு ராகுல் காந்தி லாரியில் பயணம் செய்து, ‘நப்ராத் கா பஜார்’ (வெறுப்பு கடைவீதி) என்ற பெயர்ப்பலகையைக் கடந்து செல்கிறார். அவரது லாரி அந்தப் பலகையைக் கீழே இடித்துத் தள்ள ‘அன்புக்கடை’ உதயமாகிறது.

மற்றொரு புறம் மோடியும், அமித்ஷாவும் ‘டிவைட் அண்ட் ரூல்’ (‘பிரித்து ஆட்சி செய்வோம்’) என்ற புத்தகத்தை ஆர்வமுடன் புரட்டும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. தனது இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி “வெறுப்பு கடைகளை மூடி அன்பு கடைகளைத் திறப்போம்” என்ற கோஷத்தை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

காங்கிரஸின் வீடியோ புதுமையாக உள்ளதால் இந்த வீடியோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.