ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு இதுவரை 217 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
வெலன்சியா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு பெய்த இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் பல நகரங்கள் நீரில் மூழ்கின.
வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க வந்த மீட்புப்படையினர் சேறும் சகதியுமான இடங்களில் இருந்த கழிவுகளை அகற்றிய பிறகே மக்களை சென்றடைய முடிந்தது.
ஸ்பெயின் நாட்டில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நொடிப்பொழுதில் பல வீடுகள் தரைமட்டமாகின.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வெலன்சியா பிராந்தியத்தில் உள்ள பைபரோட்டா நகரத்தில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது.
மோசமாக பாதிக்கப்பட்ட இந்த நகரை பார்வையிட ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ VI மற்றும் அந்நாட்டு ராணி லெடீசியா ஆகியோர் நேற்று சென்றனர் அவர்களுடன் ஸ்பெயின் பிரதமர் பெட்ரா சஞ்செஸும் உடன் சென்றார்.
மன்னரின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மக்கள் “கொலைகாரர்களே, வெளியேறுங்கள்” என்று கத்தியபடி ஆக்ரோஷமாக அவர்களை முற்றுகையிட்டனர்.
மக்களின் எதிர்ப்பை மீறி முன்னேறிய மன்னர் மீது சேற்றை வாரி வீசியதை அடுத்து அவரது முகம் மற்றும் ஆடையில் வந்து விழுந்தது.
மன்னருடன் பாதுகாப்பிற்கு வந்த பாதுகாவலர்கள் அவரை மேலும் முன்னேறவிடாமல் சூழ்ந்து நின்று தடுத்தனர்.
கற்கள் மற்றும் கண்ணாடி கோப்பைகள் என கையில் கிடைத்த பொருட்களை மக்கள் வீசிய போதும் இதை கண்டு அஞ்சாமல் அவர்களை நெருங்கிச் சென்றார் மன்னர் பெலிப்பெ VI.
இருப்பினும், மன்னரின் பேச்சைக் கேட்க மக்கள் தயாராக இல்லாததை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்தில் மன்னர் மீது சேற்றை வாரி வீசிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.