லக்னோ: பிரதமர் தனது கடைசி காலத்தை கழிக்க ஏற்றம் இடம் காசி தான் என  மோடியை உ..பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவரு மான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்தார். அதுபோல,  வாரணாசியில் ஓடும் கங்கை நதியில் பிரதமர் மோடி  நீராடியபோது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏன் நீராடவில்லை என்பது குறித்தும் கலாய்த்துள்ளார்.

2 நாள் பயணமாக தனது தொகுதியான வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.  கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மேலும், நேற்று இரவு பல்வேறு பகுதிகளுக்கு சென்றும் ஆய்வு நடத்தினார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,  ‘‘பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்க ஏற்ற இடம் அது தான். பொதுவாக இந்துக்கள் தங்களது கடைசி காலத்தை காசியில் கழிக்கவே விரும்புவர். பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது’’ என்று தெரிவித்தார்.

அதுபோல, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்  கங்கையில் நீராடாதது குறித்தும் கருத்து தெரிவித்தார். உ.பி.யில் நதிகள் எதுவும் சுத்தமாக இல்லை என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்கு அறிவார், எனவே அவர் கங்கையில் நீராட வேண்டாம் என்று முடிவு செய்ததாக தெரிகிறது’’ என்றும் கிண்டல் செய்தார்.

அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங்,  ‘‘தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியை அருவருப்பாகவும், மோசமாகவும் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.