சென்னை: ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமானவர் ம.பொ. சிவஞானம். இவரது 116ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 26) கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்துவைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரசால் ஒன்பது நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மே மாதத்திலேயே இந்தத் தொற்று உருவாகியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை, இதுதான் கரோனா மூன்றாவது அலையாக உருவெடுக்குமோ என்ற அச்சம் இருப்பதால், சென்னையில் பகுப்பாய்வு பரிசோதனை கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகின்றன.
உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் சோதனைக்காக இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இயந்திரங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 25 நாள்களுக்குள் பரிசோதனை மையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். தமிழ்நாட்டில் பொது நோய்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புகளை, தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். தற்போதுவரை பரவல் இல்லை; இருப்பினும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். கரோனா இரண்டாவது அலைக்காகப் பிரத்யேகமாக 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் படுக்கைகள் ஏற்கனவே தயாராகவுள்ளன. மூன்றாவது அலை வந்தாலும் அதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளன.
பொதுநோய்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.