லக்னோ:
உத்தரபிரதேசம் கோராக்பூர் அருகே குஷிநகரில் இன்று பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 13 மாணவ மாணவிகள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் ஆதித்யநாத் யோகி இன்று சென்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ரெயில்வே நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். மக்கள் ஆத்திரத்துடன் இருப்பதால் திரும்பி சென்றுவிடலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் முதல்வரை எச்சரித்தனர்.
அப்போது ஆவேசமடைந்த யோகி ஒலிபெருக்கியை வாங்கி,‘‘ கோஷம் போடுவதை நிறுத்துங்கள். போதும் இந்த நாடகம். நான் எனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்’’ என்றார்.
எனினும் மக்கள் சிலர் ரெயில் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். ஆளில்லாத லெவல் கிராசிங்கில் ரெயில்வே ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். காயமடைந்த டிரைவர், 4 குழந்தைகளை குஷிநகர் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி கூட அளிக்காமல் பிஆர்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று பார் கவுன்சில் சார்பில் முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்த குழந்தைகளில் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து யோகி கூறுகையில்,‘‘ நான் ரெயில்வே அமைச்சரிடம் பேசினேன். டிரைவர் மீது தான் தவறு என்று தெரிவித்துள்ளார். டிரைவரின் வயதிலும் சர்ச்சை உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கோராக்பூர் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு முழு ஆதரவையும் அளிக்கும். தவறு செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.