மீரட், உத்திரப்பிரதேசம்

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த உத்திரப் பிரதேச சிஆர்பிஃப் வீரர் இறுதிச் சடங்கில் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதாக பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் மீரட் நகரை சேர்ந்த அஜய்குமார் என்னும் வீரர் வீர மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள பாஜக தலைவர்கள் சத்யபால் சிங், சித்தார்த் நாத் சிங், உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அப்போது அவர்கள் காலணிகளை கழற்றாமல் வந்தது அஜய்குமார் உறவினர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது.

அஜய் குமாரின் உறவினர் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தி காலணிகளுடன் இறுதி மரியாதை செலுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் காலணிகளை கழற்றி விட்டு இறுதி மரியாதை செலுத்தி உள்ளனர். அது மட்டுமின்றி இறுதிச் சடங்குகள் ந்டை பெறும் போது பாஜக தலைவர்கள் ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததும் மக்களின் கோபத்தை தூண்டி உள்ளது.

இவ்வாறு சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணத்தை பாஜக சட்டை செய்யாமல் இருப்பது முதல் முறை அல்ல என பல நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து தொலைபேசியில் பேசி வந்தார். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி அலகாபாத்தில் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் கலந்துக் கொண்டுள்ளார்.