டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது வரலாற்று வெற்றி.. மக்களின் அன்புக்கு தலைவணங்கு கிறேன்” என தெரிவித்து உள்ளார்.
நாட்டின் 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இருந்தாலும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதில் பாஜக மட்டும் 239 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவை என்பதால், எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் அரசியல் பேரங்கள் நடைபெறும் வாய்ப்பு எழுந்துள்ளது.
இருந்தாலும் தனிப்பெருங்கட்சி என்பதால், மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது வரலாற்று வெற்றி. இந்த அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது குடும்பத்தினருக்கு நன்றி.
இந்த பாசத்திற்காக ஜனதா ஜனார்தனுக்கு நான் தலைவணங்குவதுடன், கடந்த பத்தாண்டுகளில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என்று உறுதியளிக்கிறேன். நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற, புதிய ஆற்றல், புதிய உற்சாகம் மற்றும் புதிய தீர்மானங்களுடன் முன்னேறுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது ” என பதிவிட்டுள்ளார்.
ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றியது குறித்து குறிப்பிட பிரதமர், “ஒடிசா மக்களுக்கு நன்றி. இது நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஒடிசாவின் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டாடுகிறோம். மக்களின் கனவுகளை நனவாக்கி, ஒடிசாவை முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என பதிவிட்டுள்ளார்.