கானா, ஆப்ரிக்கா
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டில் புதிய வகை வைரஸ் பரவி வருவது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
உலக மக்களைக் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அத்துடன் அடுத்ததாக குரங்கம்மை வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது. பல நாடுகளில் தற்போது குரங்கம்மை பரவல் காணப்படுகிறது. இந்நிலையில் ஆப்ரிக்காவில் தற்போது மார்பர்க் என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருவது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டு அரசு தகவலின்படி இதுவரை 2 பேர் வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு 26 வயது எனவும் மற்றவருக்கு 51 வயது எனவும் தெரிய வந்துள்ளது. இந்த இருவருடன் தொடர்புடைய 90க்கும் மேற்பட்டோர் கடும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மார்பர்க் வைரஸ் எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு அறிகுறிகளாக ரத்தப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூக்கு மற்றும் பிறப்பு உறுப்புக்களில் ரத்தம் வடிதல் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்கியவர்கள் கண்கள் ஆழமாகப் புதைந்தது போலக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது