சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் பலத்த புழுதிக்காற்று வீசியதல மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
நாளுக்கு நாள் சென்னையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நடப்பாண்டில் சென்னையில் நேற்று முன்தினம் முதல் முறையாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி இருந்தது. சென்னை வாசிகள்அனல் பறந்த வெப்பக் காற்றால் கடும் இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள்.
மதியம் வீசும் வெப்ப காற்றால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். சென்னையில் வெப்பத்தின் தாக்கத்தை நேற்றும் உணர முடிந்ததால் வாகன ஓட்டிகளை போன்றே பாதசாரிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.
நேற்று கடும் வெயிலுக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசி கடல் மணற்பரப்பில் இருந்து புழுதி மணலோடு காற்று வீசியதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீதும், நடந்து சென்றவர்கள் மீதும் மணல் விழுந்தது. காமராஜர் சாலை மற்றும் மெரினா உட்புற சாலையில் வாகனத்தில் சென்ற மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.