பெங்களூரு

சுதந்திர வீரர் பகத்சிங்கை நேரு உள்ளிட்டோர் சந்திக்கவில்லை என மோடி கூறியது பொய் என நிரூபணம் ஆகி உள்ளது.

கர்நாடகா தேர்தலில் பிரதமர் மோடி பாஜகவுக்காக பல இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு கூட்டத்தில் மோடி, “சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், பாதுகேஸ்வர் தத் போன்றோர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த போது எந்த காங்கிரஸ் தலைவர்களாவது அவர்களை சென்று பார்த்தார்களா?  ஆனால் ஊழல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மட்டும் சென்று பார்க்கின்றனர்” எனக் கூறி உள்ளார்.

மோடியின் இந்த உரை அரசியல் ஆர்வலர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   மோடியின் இந்த உரையினால் அவர் அப்போதைய காங்கிரஸ் தலைவரான நேரு உள்ளிட்டோர் பகத்சிங்  போன்றோரை சிறையில் சென்று பார்க்கவில்லை என கூறுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.   இது குறித்து பலரும் சரித்திர விவரங்களை ஆராய்ந்துள்ளனர்.

அதில் மோடி கூறியதுபொய்யான தகவல் என தெரிய வந்துள்ளது.   அந்த காலகட்டத்தில் நேருவுக்கு சுமார் 40 வயது இருக்கும்.   அவர் தீவிர அரசியலில் இருந்த காலம் அது. அப்போது அவர் பகத்சிங் உள்ளிட்டோரை சிறைக்கு சென்று சந்தித்துள்ளார்.   இது குறித்து அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்..

நேரு, “நான் பகத் சிங் மற்றும் ஜதிந்திரநாத் தாஸ் ஆகியோரை முதன் முதலில் சிறையில் சந்தித்தேன்.   உண்ணாவிரதப் போராட்டத்தினால்  அவர்கள் அனைவரும் சோர்வுற்று படுத்த படுக்கையாக இருந்தனர்.  அவர்களால் பேசக்கூட முடியவில்லை.  அவ்வளவு சோர்விலும் பகத் சிங்கின் முகம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைதியான தோற்றத்துடன் இருந்தது.  அவர் முகத்தில் எந்த ஒரு கோபமும் இன்றி சாந்தம் தெரிந்தது” என தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தாஸ் மரணம் அடைந்ததும் அது குறித்து நேரு, ”இந்த இளைஞர்களின் தியாகம் என்னை மிகவும் துயருக்குள்ளாக்கி விட்டது.  தங்களுடைய சொந்த வருத்தங்களை பொருட்படுத்தாது நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகம் போற்றத்தக்கது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பகத்சிங் மற்றும் அவர் கூட்டாளிகள் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு தூக்கிடப்பட்டதும் காங்கிரஸ் சார்பில் இரங்கல் செய்தி ஒன்றும் நேரு அளித்துள்ளார்    அதில். “அரசியலில்  எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அதை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாது.  ஆனால் அதே நேரத்தில் பகத்சிங், மற்றும் அவர் கூட்டாளிகளான சுக்தேவ் மற்றும் ராஜ்குருவின் மரணத்துக்கும் தியாகத்துக்கும் தனது வருத்தத்தை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்களை வெளியிட்டுள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் மோடி பொய்யான தகவல்கள் கூறுவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.