டெல்லி
வட மாநிலங்களில் உள்ள மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் வடமாநிலங்களில் நடுக்க வைக்கும் குளிர் உள்ளது.. வட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்பார்த்ததற்கு ஏற்ப கொண்டாட முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். குறிப்பாக காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வெப்பநிலை, மைனஸ் 7.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தும் அங்கு பனிப்பொழிவு இல்லாததால், ‘வெள்ளை கிறிஸ்துமஸ்’ பண்டிகையை அனுபவிக்க முடியவில்லை என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்மார்க்கை தவிர, இதர அனைத்து வானிலை மையங்களிலும் இரவு நேர வெப்பநிலை மிகக்குறைவாக பதிவாகி பல்வேறு நீர்நிலைகளும், நீர் வினியோக வழித்தடங்களும் பனியால் உறைந்தன. உளகப் புகழ் பெற்ற தால் ஏரி பனிஅடுக்குகளால் முழுமையாக மூடப்பட்டிருந்தது.
வானிலை ஆய்வு மையம் இன்னும் 2 நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையும் என்று எச்சரித்துள்ளது. மேலும் இமாசல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களான தபோ, ஸ்பிடி மாவட்டம் ஆகியவை அதிக குளிர் நிறைந்த பகுதிகளாக உருவெடுத்துள்ளன. இங்கு சிம்லா நகரில் குளிர் அதிகமாக இருந்தது. மேலும் பனிப்பொழிவால், 226 சாலைகள் மூடப்பட்டன.
தலைநகர் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை, 22.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பனியால் சில சாலைகள் மூடப்பட்டிருந்தன. ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய பல வட மாநிலங்களிலும் குளிர் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.