பீஜிங்

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாக வந்துள்ள தகவல் உலக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டு பிடிக்கப்பட்டது.  முதலில் மெதுவாக பரவிய இந்த நோய் தொற்று பிறகு வேகமாகப் பரவத் தொடங்கியது.   வுகான் நகரில் மட்டுமின்றி சீனாவின் பல நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் தொற்று வேறு சில நாடுகளுக்குப் பரவியது.

ஆட்கொல்லி நோயான இந்த வைரஸ் தாக்குதலால் உலக சுகாதார அமைப்பு அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.   உலகின் பல நாடுக்ளிலும் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.    இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பு பலரை மகிழ்வில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்த அறிவிப்பை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் துறை துணை இயக்குனர் ஜெனரல் லிஜான் ஜாவோ வெளியிட்டுள்ளார்.

 

 

அந்த அறிவிப்பில், “கடந்த பிப்ரவரி ,மாதம் 3ஆம் தேதி அன்று ஹுபெய் தவிர மற்ற் பகுதிகளில் 890 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.   ஆனால் ஒரு வாரம் கழித்து அதாவது பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அன்று 444 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அதாவது 50% குறைந்துள்ளது.   இதன் மூலம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெற்றி அடைந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது” எனக் காணப்படுகிறது.

இந்த செய்தியால் சீன மக்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளில் உள்ள மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.