விருத்தாசலம் அருகே செம்மண் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 வாரமாக இப்பகுதி மக்களுக்கு செம்மண் கலந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் அலைந்து திரிகின்றனர். அதனால் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.