டெல்லி: ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் (Life Certificate) அளிக்க கால அவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
ஏற்கனவே ‘லைப் சர்டிபிகேட்’ வழங்க அக்டோபர் வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஓய்வுதியதாரர்களுக்கு சலுகை வழங்கப்படுவதாகவும், அதன்படி டிசம்பர் 31ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற உயிர்வாழ் சான்றிதழை அளிப்பது அவசியம். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மட்டும் இச்சான்றிதழ் பெறப்படும். ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிவரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1-ந்தேதியில் இருந்து டிசம்பர் 31-ந்தேதிவரை இந்த சான்றிதழை அளிக்கலாம்.
80 வயது மற்றும் அதை தாண்டியவர்கள், அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து டிசம்பர் 31-ந்தேதிவரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கலாம். இந்த காலகட்டத்தில் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகள், தங்குதடையின்றி தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவார்கள். வயதானவர்களை கொரோனா தாக்க அதிக வாய்ப்பு இருப்பதாலும், நெரிசலை தவிர்க்க வேண்டி இருப்பதாலும், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், காணொலி காட்சி மூலம் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், முதியோர்கள் வங்கிக்கு நேரில் வருவதை தவிர்க்க முடியும். அத்துடன், ஒருவர் தனது வீட்டில் இருந்தபடியே மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அளிக்கலாம் என்று ஓய்வூதிய துறை அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel