டில்லி

ய்வூதியம் பெற ஆதார் அட்டை அவசியம் என்னும் மத்திய அரசின் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் அது சலுகை அல்ல உரிமை என கூறி உள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஓய்வூதிய கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.    அவ்வாறு ஆதார் எண்ணை இணைக்கா விட்டால் ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டது.   இதை எதிர்த்து ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்தது.

இந்த வழக்கு தீபக் மிஸ்ரா, சிக்ரி, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.   அப்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது ஓய்வூதியம் தற மறுத்தமைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.  அமர்வு, “ஓய்வூதியம் என்பது அவர்களின் பணிக்காக தரப்படும் உரிமை.    சலுகை அல்ல.   சலுகைகள் பெறுவதற்கு மட்டுமே ஆதார் அவசியம் என ஆதார் சட்டம் தெரிவிக்கின்றது.    அப்படி இருக்க ஓய்வூதியத்துக்கு ஆதார் அவசியம் என்பது தவறானது.

பல ஓய்வூதிய பயனாளிகள் தங்கள் குழந்தைகளுடன் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.   அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என சொல்வது சரியானதா?   பலருக்கு முதுமை காரணமாக ரேகை மற்றும் கண்விழிகள் போன்ற சான்றுகள் சரியில்லாததால் ஆதார் பெற முடியாத நிலையில் உள்ளனர்.   அவர்களுக்கு அவர்களின் உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம்?” எனக் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் வேணு கோபால், “பலர் போலி ஓய்வூதியக் கணக்கின் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.  அதைக் கண்டறியவே இம்முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.   அதற்கு நீதிபதி சந்திரசூட், “பல நேரங்களில் மின் தடை,  நெட் ஒர்க் இல்லாமை ஆகிய காரணங்களினாலும் பலருடைய அடையாளங்கள் இணையாமல் போகலாம்.  அத்துடன் தொழு நோயால் விரல்கள் பாதிக்கப்பட்டவர்கள்,  கண்கள் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்காக எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படாத நிலையில் ஆதார் எப்படி கட்டாயம் ஆக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து உடனடியாக ஒரு தீர்வு காணாமல் ஆதாரை இணைப்பது தவறான செய்கை என உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.