பரிமலை

இன்னும் ஒரு வாரத்துக்குள் சபரிமலை கோவில் நடை திறக்க உள்ள நேரத்தில் இங்குப் பல கட்டமைப்பு வேலைகள் பாக்கியில் உள்ளன.  இது குறித்த இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி இதோ.

வரும் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி அதாவது நவம்பர் 16 முதல் சபரிமலையில் மண்டல பூஜை தொடங்குகிறது.  இந்த பூஜையை ஒட்டி வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.   அதன்பிறகு டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் மகரவிளக்கு முன்னிட்டு திறக்கப்பட உள்ளது.  இந்த மண்டல பூஜை நடை திறப்புக்கு முன்பு பல வசதிகள் பக்தர்களுக்கு அளிக்கப்படும் என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது.

அது குறித்த விவரங்களின் இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி இதோ

வயது முதிர்ந்த மற்றும் உடல்நிலை பாதிப்படைந்த பக்தர்கள் வசதிக்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை ரோப்கார் கொண்டு வர வேண்டும் என ஒரு திட்டம் தீட்டப்பட்டது.   அந்த திட்டம் இன்னும் திட்டமாகவே உள்ளது.   தொடக்கத்தை அது எப்போது காணும் என்பது பக்தர்களுக்குக் கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சபரிமலையில் அன்னதான மண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன்.   அந்த பணிகள் 18 மாதங்களுக்குள் முடியும் என சொல்லப்பட்ட நிலையில் அந்தப் பணிகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.

சபரிமலைக்கு வருமானம் ஈட்ட 11 ஓட்டல்கள் கட்ட திருவாங்கூர் தேவசம் போர்ட் ஏலம் விட்டது.  ஆனால் அந்த ஏலத்துக்குச் சரியான அளவு வரவேற்பு இல்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் ஏலத்தின் மூலமும் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை எனக் கூறி பல திட்டங்களை தேவசம் போர்டு நிறுத்தி வைத்துள்ளது.

குப்பை ஒழிப்பு குறித்த நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை.  இதனால் சுகாதார பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  பம்பை மற்றும் நிலக்கல்லில் அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.  அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதைகள் இன்னும் முழுமையாகச் செப்பனிடப்படாதது பலருக்கும் துயரை அளிக்கிறது.

எனவே இந்த பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் கோவில் நடைதிறப்பு  நடக்க உள்ளது.