லக்னோ: பாம்புகடித்து உயிரிழந்த நபரை, அவர்  உயிர் பிழைப்பார் என கங்கை நதியில் 2 நாளாக மிதக்க வைத்த அவலம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மதவேறுபாடுகளின்றி மக்களிடையே மூட நம்பிக்கைகள் தொன்றுதொட்டு வளர்ந்து வருகிறது. இந்து சமய நம்பிக்கைகள், இசுலாமிய மத நம்பிக்கைகள், கிறித்தவ மற்றும் பௌத்த மத நம்பிக்கைகள் தாண்டி ஏராளமான  மூடநம்பிக்கைகள்  மக்களிடையே  வேரூன்றி போய் உள்ளது.  பொதுவாக அதிர்ஷ்டம், தாயத்துக்கள், ஜோதிடம், அதிர்ஷ்டம் சொல்லுதல், ஆவிகள், மற்றும் சில அமானுஷ்ய நிறுவனங்கள், குறிப்பாக எதிர்கால நிகழ்வுகள் குறிப்பிட்ட (வெளிப்படையாக) தொடர்பில்லாத முந்தைய நிகழ்வுகளை ஒப்பிட்டு இன்னும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

கல்வி வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும், மற்றொரு புறம் மூட நம்பிக்கையும் மக்களிடையே நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதை ஒருவரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதன் எதிரொலிதான் இந்த சம்பவம்.

அதுபோல ஒரு மூடநம்பிக்கையின் உச்சமாக, சந்நியாசி யோசி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகஆட்சி செய்துவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.  அங்கு பாம்பு கடித்த இளைஞர் ஒருவரின் உயிர் மூட நம்பிக்கையால் பறிபோன அவலம்  நடைபெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர்  கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் உ.பி.யில் நடைபெற்ற மக்களவை  தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தேர்தல்அன்று  தனது வாக்கினை செலுத்தினார். அதையடுத்து, தங்களது சொந்த   வயல்வெளிகளுக்கு சென்று விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால், அவர் உடனே வீட்டுக்கு சென்று,  பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், விஷம் அவரது உடலில் முழுமையாக ஏறிவிட்டது. அதனால் காப்பாற்ற முடியாது என்று கூறியிருக்கிறார். அப்போது அருகே இருந்த ஒருவர், பாம்பு கடித்த இளைஞரை, கங்கை நதியில் மிதக்க வைத்தால், அவரது உடலில் இருந்து பாம்பின் விஷம் இறங்கி விடும் என கூறியிருக்கிறார்.

இந்த மூட நம்பிக்கையை   நம்பிய இளைஞரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்,  பாம்பு கடித்த இளைஞரின் உடலை, கயிறால் கட்டி, கங்கை நதியில் மிதக்க வைத்தனர். ஆனால், அவரது உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், உயிர் பிரிந்தது. ஆனால், அப்பகுதி மக்களே அந்த இளைஞரின் உடலை மீட்டு, அவருக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட கண்டறியாமல், இறந்த நபரின் உடலை தண்ணீரில் 2 நாட்களாக மிதக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களின் மூட நம்பிக்கையால், காப்பற்றப்பட வேண்டிய இளைஞரின் உயிர் அநியாகமாக போயுள்ளது. இது தொடர்பாக வீடியோ வைரலான நிலையில், அதை காணும் நெட்டிசன்கள் அப்பகுதி மக்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.