நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ் சட்டமன்றத்தில் கூறினார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான இந்தப் படம் குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் அது இப்போது மகாராஷ்டிராவில் வன்முறையாக மாறியுள்ளது.
அவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் எனும் இடத்தில் உள்ள ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கை வைத்ததுடன் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற ஆர்பாட்டம் குறித்து வெளியான தகவலை அடுத்து இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு மதக்கலவரமாக மாறியதால் நாகபூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா, அக்சய் கன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சாவா’ படத்தில் மராத்தா மன்னர் சாம்போஜி மற்றும் அவரது இளைய சகோதரரும் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ராஜாராமுக்கும் இடையேயான மோதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
மேலும், மன்னர் சாம்போஜிக்கும் ஔரங்கசீப்புக்கும் இடையேயான மோதல் குறித்தும் காட்டப்பட்டது.
படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதல் சர்ச்சை எழுந்த நிலையில் அக்பரைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது, ஆனால் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் குறித்து பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை என்று கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி, “அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார்… அவுரங்கசீப் கொடூரமானவர் அல்ல. அவுரங்கசீப்பைப் பற்றி நான் படித்தவற்றிலிருந்து, அவர் ஒருபோதும் தனது சொந்த நலனுக்காக பொதுப் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். அவரது பேரரசு பர்மா (இன்றைய மியான்மர்) வரை பரவியிருந்தது. அந்த நேரத்தில் இந்தியா தங்கப் பறவை என்று அழைக்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்று நான் நினைக்கிறேன், அவருடைய படையில் பல இந்து தளபதிகள் இருந்தனர்.” என்று கூறினார்.
அபு ஆஸ்மியின் அறிக்கை குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “தேசபக்தர் சம்பாஜியைக் கொன்ற ஔரங்கசீப்பை ஒரு நல்ல ஆட்சியாளர் என்று அழைத்ததன் மூலம் அபு ஆஸ்மி ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்” என்றார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஷிண்டே கோரினார். இந்த விவகாரம் மிகவும் பெரிதாகி, அஸ்மி சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்றும் அரசு செலவில் அதனை பராமரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தின.
ஆனால், ஔரங்கசீப்பின் விருப்பப்படி அவரது ஆன்மீக மற்றும் மத குருவான ஷேக் சைனுதீன் கல்லறைக்கு அருகில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற முடியாது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறினார்.
இந்த நிலையில் நேற்று நாகபூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தை அடுத்து இனக்கலவரம் மூண்டதால், இதற்கு சாவா படமும் அதனை தொடர்ந்து அபு ஆஸ்மி உள்ளிட்டோர் எழுப்பிய சர்ச்சையே காரணம் என்று தேவேந்திர பட்நாவிஸ் இன்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அபு ஆஸ்மி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த நாக்பூரில், இதற்கு முன்பு ஒருபோதும் வகுப்புவாத கலவரங்கள் நடக்கவில்லை, இந்த முறை இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருப்பது வருத்தத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது. பலர் காயமடைந்துள்ளனர்.
யாராலும் தூண்டப்பட வேண்டாம் என்று நான் கூற விரும்புகிறேன். அமைதியைப் பேணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.