புதுடெல்லி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி திடீரென நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்தக்கூடிய பேடிஎம் செயலி, கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும். இந்நிலையில், அந்த செயலி, விதிமுறைகளை மீறியதாக கூறப்பட்டு, திடீரென கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த செயலி, One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பேடிஎம் செயலி நீக்கப்பட்ட நிலையில், Paytm For Business, Paytm Money, Paytm Mall உள்ளிட்ட செயலிகள் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“பேடிஎம் ஆண்ட்ராய்டு செயலி, புதிய பதிவிறக்கங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்காக தற்காலிகமாக கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. ஆனால், அது விரைவில் மீண்டும் சேர்க்கப்படும். உங்கள் அனைவரின் பணமும் பாதுகாப்பாக இருக்கிறது மற்றும் இயல்பான முறையில் உங்கள் பேடிஎம் செயலியை பயன்படுத்தி பயன்பெற முடியும்” என்று பேடிஎம் சார்பாக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், தற்போது அந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.