ஐதராபாத் :
ஆந்திராவில் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வரும் பிரபல நடிகர் பவன் கல்யாண், திடீரென டெல்லி சென்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிட ஜனசேனா திட்டமிட்டிருந்தது.
ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக்கொண்டதால், “ஜனசேனா, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடாது” என பவன் கல்யாண் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
பா.ஜ.க.. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பவன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷா, உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
திருப்பதி மக்களவை தொகுதி எம்.பி. இறந்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த தொகுதியை ஜனசேனா கட்சிக்கு கேட்டு பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. திருப்பதி தொகுதியை ஜனசேனாவுக்கு கொடுத்தால், பவன் கல்யாணே அந்த தொகுதியில் போட்டியிடக்கூடும். இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா, ஐதராபாத் மாநராட்சி தேர்தலில் போட்டியிடாமல், பவன் கல்யாண் கட்சி ஒதுங்கி கொண்டதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ஐதராபாத்தில் உள்ள ஜனசேனா கட்சியை, பா.ஜ.க.வுக்கு பவன் கல்யாண் விற்று விட்டார். ஒரு கட்சியின் தலைவர், வேறு கட்சிக்கு (பா.ஜ.க.) ஓட்டு போடச்சொல்வது இதுதான் முதன் முறை” என ரோஜா தெரிவித்துள்ளார்.
“திருப்பதியில் பவன் கல்யாண் நின்றாலும் வெல்ல முடியாது, அங்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தான் வெல்லும்” என ரோஜா மேலும் கூறினார்.
– பா. பாரதி