அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடை குவிந்து வருவதாக தெரிவித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், இதுவரை ரூ. ரூ.1,600 கோடி நன்கொடை வசூலாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.
அயோத்தியில் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் ராமர்கோவில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ராமர்கோவில் கட்டிடப்பணிகளை நிர்வகிக்க ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதன்மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நன்கொடை திரட்டும் பணி நிதி சங்கல்ப் சங்கர்ஹ் (Nidhi Sankalp Sangrah) என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி தொடங்கியது. அதன்படி நாடு முழுவதும் 5 லட்சம் கிராமங்களில் சுமார் 12 கோடி குடும்பத்தினரிடம் நிதி வசூலிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், அயோத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ஏராளமான பக்தர்கள், பல்வேறு மதத்தினர் நன்கொடை அளித்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் யாத்திரை மூலம் பொதுமக்களிடையே நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுவரை நன்கொடையாக ரூ.1600 கோடி வசூலாகி உள்ளதாகவும், 400 கிலோ வெள்ளி செங்கற்கள் வந்துள்ளதாக அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. மேலும் வெள்ளி செங்கல்கள் உள்பட பொருட்களை வங்கி லாக்கரில் சேமிக்க இடமில்லை. ஆகவே, பக்தர்கள் வழங்கும் நன்கொடையை பணமாக வழங்குங்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.