பாட்னா: சனாதன தர்மம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது நாடு முழுவதும் பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு வரும் பிப்ரவரி 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 2023ம் ஆண்டு செப்.2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தியது. இதில் கலந்துகொண்ட தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் வழங்குவதாக கூறினார்
உதயநிதி பேசியது, அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்றும், இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவர்கள் மீதும், வெறுப்பு பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு, பீ்ட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும், பல மாநிலங்களிலும் புகார்களின் பேரில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கவுசலேந்திர நாராயணன் என்பவர் பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த அதையடுத்து,பிப்ரவரி 13ம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு சம்மன் அனுப்பி பாட்னா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி அல்லது வழக்கறிஞர் மூலமாகவே ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியுள்ளது. எனினும், அமைச்சராக இருப்பதால் பல்வேறு பணிகளில் உதயநிதி பிசியாக இருப்பார் என்பதால் வழக்கறிஞரை வைத்து தனது தரப்பு வாதங்களை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.