சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று மாலை மதுரை பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். முதல்நாள்  தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும்  கொண்டாடப்படும். அதன்படி,  நடப்பாண்டு,  அக்டோபர் 20 முதல் 30ந்தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று விழா தொடங்கியது.

பசும்பொன்னில்  உள்ள தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், பழனி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில்க வேள்வியுடன் தொடங்கியது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர்,   மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று 2வது நாள் விழா நடைபெற்று வருகிறது. இன்றைய விழா அரசியல் விழாவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. விழாவில், பல்வேறு சொற்பொழிவாளர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு   தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாற்றி வருகிறார்கள்.

இறுதியாக, 3வது நாளான நாளை (30-ந்தேதி)  தேவர் குருபூஜை விழா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தால் சிறப்பாக  நடைபெறுகிறது.

இதையொட்டி தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தேவர்   நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தேவர் குருபூஜையில் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செய்ய பசும்பொன் செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்கிறார்.  அங்கு  புதூர் செல்லும் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

நாளை (30-ந்தேதி) காலை  கார் மூலம் விருந்தினர் மாளிகையில் இருந்து  புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர்  மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து,  அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்  செல்கிறார். அங்கு   முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.

இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

இதேபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத் தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.

தேவர் குருபூஜையையொட்டிடி, பாதுகாப்பு முன்னேற்பா டுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன் கேமிரா பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளதுடன், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.