டெல்லி: முகக்கவசம் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கி விடுங்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி  உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆணையிட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதால், சில நகரங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டமாயக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், விமான பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இதையடுத்து,  விமான நிலையங்கள், விமானத்தில் கொரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்ற டிஜிசிஏ கூறியுள்ளது.  அதன்படி,  விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் விமான பயணத்தின் முழு நேரமும் முகக்கவசத்துடன் இருக்க வேண்டும் எனவும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும்  கொரோனா தடுப்பூசி விதிமீறலில் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.