திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா தொற்று பீதியடைந்த வைத்துடன், பல லட்சம் பேரை காவு வாங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக குரங்கம்மை எனப்படும் தொற்றுநோய் பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. குரங்கு அம்மை பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு, இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது.
இந்த மங்கி பாக்ஸ் நோய் ஆப்பிரிக்காவின் காங்கோவில் இருந்து பரவிய இந்தநோய் தற்போது 116 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நோய் தாக்கத்தால், இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து உலக நாடுகள் குரங்கம்மை நோய் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்திய அரசும், அனைத்து மாநிலங்களிலும் குரங்கம்மை தடுப்பை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளதுடன், விமான நிலையங்களில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் கடந்த செப்டம்பரில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்தது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இதைத்தொர்ந்து யாருக்கும் குரங்கம்மை தொற்று கண்டறியப்படாத நிலையில், தற்போது திடீரென தமிழ்நாட்டில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளியையொட்டி, நேற்று அதிகாலை சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 28 வயதான திருவாரூரை சேர்ந்த இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பிடப்பட்ட நபர், காய்ச்சல், உடல் சோர்வு உடன், உடலில் சில கொப்புளங்கள் காணப்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.