சிவலிங்கத்தை மீட்கக் காளியாக மாறிய பார்வதி தேவி


கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிந்தல்மன்னாவுக்கு அருகில் உள்ளது அங்காடிப்புரம். இங்கு திருமாந்தம்குன்னு என்ற பிரசித்தி பெற்ற சிவ ஆலயம் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு :-

சூரிய வம்சத்தைச் சேர்ந்த மந்ததா என்ற அரசன் மிகவும் சிறப்பாக இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தார். இவர் சிவ பெருமானின் மீதுள்ள அதீத பற்று காரணமாகக் கைலாயத்திற்குச் சென்று கடும் தவம் இருந்தார்.

இவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் நேரில் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, மிகவும் சக்தி வாய்ந்த, அழகிய மிகத் தெளிவான என்றென்றும் அருள் புரியும் சிவலிங்கம் தனக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டார்.

அப்படி ஒரு சிவலிங்கம் என் மனைவி பார்வதி தான் பூஜை செய்கிறார். அதைத் தருகின்றேன் என அளித்தார். அந்த சிவலிங்கத்தை மந்ததா அரசன் தனது தலை மீது சுமந்து தான் அரசாலும் கோயில் அமைந்துள்ள பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பார்வதிதேவி சிவ பெருமானின் ஸ்வரூபமான சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யச் சென்ற போது அங்குச் சிவ லிங்கம் இல்லாததும், அது மந்ததா அரசன் எடுத்துச் செல்வதை அறிந்து, அதை மீட்டு வர பூதகணங்களை அனுப்பினார்.

பூதகணங்களால் மீட்டு வர முடியாததால், கோபத்தில் காளி தேவியாக மாறி மந்ததா அரசனிடம் போராடினாள். 15 நாட்கள் போராடியும் மந்ததா அரசனிடமிருந்து அந்த சிவலிங்கத்தை மீட்க முடியவில்லை.

இதையடுத்து காளி தேவி ஆயுதத்தால் தாக்க அது சிவபெருமான் மீதுபட, தான் வரம் கொடுத்ததன் பெயரில் மந்ததா அரசனுடன் செல்கிறேன் எனச் சிவபெருமான் கூறினார்.

சிவபெருமானை விட்டு என்னால் இருக்க முடியாது அதனால் நானும் இந்த சிவலிங்கத்தில் கலக்கின்றேன் எனப் பார்வதி தேவியும் கலந்ததாகக் கூறப்படுகின்றது.

மாங்கல்ய பூஜை :-

இந்த கோயிலில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியில் பிரதி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ‘மாங்கல்ய பூஜை’ நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

வழக்கமாக விநாயகருக்கு இடது பக்கம் நின்று வணங்கும் பக்தர்கள், இந்தப் பூஜையின்போது நேராக நின்று வணங்கவேண்டும் என்ற வழக்குள்ளது. இங்கு காளி தேவிக்குத் தனி சன்னதியும் உள்ளது.