சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அமைப்புகளுக்கான தலைமை பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று (மார்ச் 4ந்தேதி) நடைபெற்றது. இதில் கட்சிகள் பெற்ற வெற்றிகள் எத்தனை? என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2ந்தேதி கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர். அதையடுத்து, நேற்று (மார்ச் 4ந்தேதி) மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் உள்பட தலைமைப் பதவிகளுக்கு மறைமுதல் தேர்தல் நடைபெற்றது.
இந்த மறைமுக தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றிகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 20 மாநகராட்சிகளில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது.
மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் மதிமுக, சிபிஐ, சிபிஐஎம், விசிக ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
138 நகராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலை பொறுத்தவரையில், திமுக 125 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 2 இடங்களிலும் சுயேட்சை 4 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகியவை தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
4 இடங்களில் குறைவெண் வரம்பின்மை (போதிய உறுப்பினர்கள் வராததால்) காரணமாக தேர்தல் நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
138 நகராட்சித் துணைத்தலைவருக்கான தேர்தலில் திமுக 98 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் மதிமுக 4 இடங்களிலும், விசிக, சிபிஐ,சிபிஐஎம் ஆகியவை தலா 2 மற்றும் சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மீதமுள்ள 11 இடங்களில் குறைவெண் (போதிய உறுப்பினர்கள் வராததால்) வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
489 பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் திமுக 395 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், அதிமுக 18 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், சிபிஐஎம் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சிபிஐ, விசிக, மமக ஆகியவை தலா 1 இடத்திலும், மதிமுக, அமமுக ஆகியவை தலா 2 இடத்திலும், சுயேட்சை 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மீதமுள்ள 13 இடங்களில் குறைவெண் (போதிய உறுப்பினர்கள் வராததால்) வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
489 பேரூராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் திமுக 331 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் அதிமுக 27 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும், சிபிஐஎம் 5 இடங்களிலும், சுயேட்சை 34 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாமக, விசிக, ஆகியவை தலா 3 இடங்களிலும், சிபிஐ, மதிமுக, அமமுக ஆகியவை தலா 2 இடங்களிலும், தேமுதிக மமக ஆகியவை தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மீதமுள்ள 35 இடங்களில் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.