டில்லி

டில்லி துணைநிலை ஆளுநருக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

டில்லி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரை விடத் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் உள்ளன.   இதை எதிர்த்து ஒவ்வொரு முறையும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து தனது உத்தரவுகளை நிறைவேற்றி வருகிறார்.   இந்நிலையில் மத்திய அரசு ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தது..

அந்த மசோதாவின்படி டில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு மேலும் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.    மேலும் இந்த மசோதாவால் டில்லி அரசு என்றாலே ஆளுநரை குறிப்பதாகும் என ஆக உள்ளது.  இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், டில்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.   எதிர்க்கட்சிகள் இந்த மசோதா ஜனநாயகத்தை நசுக்க பாஜக அரசு செய்யும் முயற்சி எனக் கடுமையாக விமர்சித்துள்ளன.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ”இது ஒரு அபாயகரமான மசோதா,  இந்த மசோதாவின் மூலம் டில்லி அரசு என்பதே துணை நிலை ஆளுநர் மட்டுமே என ஆகி மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும்    இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு ஒப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.