புத்தர் ஞானம் அடைந்த இடமாக கருதப்படும் பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரம் தற்போது வேறொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
கயா அல்லது புத்த கயா என்று அழைக்கப்படும் இந்த நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (International Air Transport Association’s – IATA) அளித்துள்ள குறியீடு இப்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் விமான நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் IATA அமைப்பு விமான நிறுவனங்களுக்கு இரண்டு எழுத்து குறியீடும் விமான நிலையங்களுக்கு மூன்று எழுத்து குறியீடும் வழங்குகிறது.
இந்த குறியீட்டின் மூலம் எந்த நிறுவனத்தின் விமானம் எந்த விமான நிலையத்திற்கு செல்கிறது என்பதை கண்காணிக்க இந்த குறியீடு உதவுகிறது.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா விமான நிலையத்திற்கு GAY என்று மூன்று எழுத்து குறியீடு வழங்கி இருந்தது.
GAY என்ற ஆங்கில சொல் ஆண் ஓரின சேர்கையாளரை குறிப்பிடுவதால் இந்த குறியீட்டை நீக்கி வேறு குறியீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு கோரிக்கை வைத்துள்ளது.
பிப். 4 ம் தேதி பிரதமர் மோடிக்கு இந்த குழு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது, மேலும் குறியீடு மாற்றம் குறித்து IATA அமைப்பிடம் வலியுறுத்தவும் வேண்டுகோள் வைத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த IATA அமைப்பு, “விமான நிலைய குறியீடு என்பது எந்த வித மாறுதலும் இல்லாமல் நிலையானதாக இருக்கும், கயா விமான நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இது திடீரென்று சர்ச்சையாகி இருக்கிறது. போதிய வலுவான காரணங்கள் இன்றி இதனை மாற்ற இயலாது” என்று கூறியுள்ளது.