சென்னை: புதியதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்,  ஜூலை 19ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டதுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்றத்தை கட்டி,  கடந்த மே மாதம் (2024) 28ந்தேதி திறந்தது. முன்னதாக இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு 2020 டிசம்பரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய பாராளுமன்ற லோக்சபா கட்டிடத்தில்,   888 உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ. 971 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற  வளாகத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, நூலகம், பல குழு அறைகள், உணவருந்தும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாராளுமன்ற கட்டிடத்தில், தமிழ்நாட்டில் பாரம்பரியமான, நந்தி பொறிக்கப்பட்ட செங்கோலும் நிறுவப்பட்டு உள்ளது.

இந்த புதிய கட்டிடத்தில் முதன்முறையாக பாராளுமன்ற மழைக்கால கூட்டம் தொடர் வரும் 20ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த கூட்டத் தொடரானது.  ஜூலை 20;ந்தேதி  தொடங்கி ஆகஸ்டு 11ந்தேதி  வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம்  17 அமா்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த கூட்டத்தொடரின்போது, மத்தியஅரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதே வேளையில் எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டம், டெல்லி நிா்வாகப் பணிகள் தொடா்பான மத்திய அரசின் அவசரச் சட்டம், மணிப்பூர் நிலவரம் உள்பட பல விவகாரங்கள் குறித்து விவாதங்களை எழுப்ப உள்ளன.

இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, சட்டம் இயற்றுதல் மற்றும் இதர விவகாரங்களில், ஆக்கபூா்வமான விவாதங்கள் நடைபெற அனைத்துக் கட்சிகளும் பங்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.