சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, திமுக உடனான கூட்டணியில் இணைவதாக அறிவித்து உள்ளது.

இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், திமுக தலைவர் மு.க.ஸ்டா லினை சந்தித்து, திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

கடந்த 2014ம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஐஜேகே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனால், தற்போதைய நிலையில், அந்த கட்சியை அதிமுக பாஜக தலைமை சீண்டாத நிலையில், திடீரென இப்போது, திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இன்று  காலை சுமார் 11 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர்,  ஸ்டாலினை சந்தித்து, எங்கள் கட்சி ஆதரவை தெரிவிக்க பற்றி மட்டுமே வந்தோம் என்று தெரிவித்தார்.

மற்றபடி, தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு. அதை ஸ்டாலினை நேரில் சந்தித்து தெரிவித்தேன் என்றார்.

மேலும், எங்களுக்கு தொகுதி பங்ககீடு தருவது குறித்து  திமுகவுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்., தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை ஸ்டாலினால்தான் கொடுக்க முடியும். எனவே திமுகவிற்கு ஆதரவு தருகிறோம் என்றார்.

மேலும், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலக காரணம் பாமகதான் என்றும் குற்றம் சாட்டினார்.

திமுக கூட்டணியில், ஐஜேகேவுக்கு  கள்ளக்குறிச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.