மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிப்பு, அந்த காரின் உரிமையாளர் மர்ம மரணம் மற்றும் அது தொடர்பாக காவல் அதிகாரி சச்சின் வாஸே தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மாநில உள்துறை அமைச்சர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக காராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் தெற்கு மும்பையில் உள்ள பலஅடுக்கு மாடிகளைக் கொண்ட பிரமாண்ட பங்களா முன்பு, அனாமேதயமாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த வழக்கை மும்பை காவல்துறைவிசாரித்த நிலையில், அந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் என்பவர் மர்மமாக இறந்து கிடந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, மும்பையின் காவல்துறை அதிகாரி சச்சின் வாஸே தேசிய புலனாய்வு அமைப்பினால் கைது செய்யப்பட்டார். சில நாள்களுகு முன் போலீஸ் அதிகாரி சச்சின், தெற்கு மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் ஐந்து நாட்கள் தங்கி இருந்து திட்டம் தீட்டி இருக்கிறார் என்று கூறப்ட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மும்பை மாநக காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் பரபரப்பு தகவலை தெரிவித்திருந்தார். ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக தாமும் தமது அலுவலகமும் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடுகள் இருந்தன என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஊர்க் காவல் படையின் தலைமைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இதனால் சர்ச்சை மேலும் சூடுபிடித்து.
ஆனால், இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் தேஷ்முக், முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இதனால் வெகுண்டெழுந்த பரம்பீர் சிங், உள்துறை அமைச்சர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி அதிரடியாக கடிதம் எழுதி முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு நேரடியாக அனுப்பினர். 8 பக்கங்கள் கண்ட அவரது கடிதத்தில் , அமைச்சர் தேஷ்முக் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடுன், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள போலீஸ் அதிகாரிகளை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பல முறை சச்சின் வாஸேவைத் தனது இல்லத்திற்கு அழைத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நூறு கோடி ரூபாய் இலக்கை அடைவதற்கு, மும்பையில் சுமார் 1,750 பார்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன என்றும், இவர்கள் தலா 2-3 லட்சம் வசூலித்தால், மாதந்தோறும் ரூ. 40-50 கோடி ரூபாய் அடைய முடியும் என்றும் மீதமுள்ள தொகையை வேறு விதமாகத் திரட்டலாம் என்றும் உள்துறை அமைச்சர் கூறியதாக, சச்சின் வாஸே, தம்மைத் தமது அலுவலகத்தில் சந்தித்து இதைத் தெரிவித்ததாகவும், இதைக் கேட்டு தாம் அதிர்ச்சியடைந்தே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள 1750 பார்கள், உணவு விடுதிகள், பிற நிறுவனங்கள் மூலம், 40 முதல் 50 கோடி வரை திரட்டும் இலக்கு குறித்து, உள்துறை அமைச்சர் அவரது உதவியாளர் மூலம் தெரிவிக்கும் இன்னொரு சந்திப்பும் இரண்டு மூத்த காவல் துறை அதிகாரிகளுடன் நடந்ததாகவும் பரம்பீர் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவல் துறை விசாரணைகளில் உள்துறை அமைச்சரின் தலையீடுகள் குறித்தும் இந்தக் கடிதம் விவரித்துள்ளது.
இதற்கிடையில், அந்த ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் என்பவர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாகவும் , தமது கணவர் மன்சுக் ஹிரானை சச்சின் வாஸே கொன்றதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். சச்சின் வாஸே கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அந்த ஸ்கார்பியோ காரை தமது கணவரிடம் இருந்து வாங்கியிருந்தார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொர்பாக மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பரம்பீர் சிங், உள்துறை மந்திரி மீது உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனுவில், கடந்த பிப்ரவரியில் எனது போலீஸ் அதிகாரிகள் பலரை மாநில உள்துறை மந்திரி வீட்டுக்கு அழைத்து ஓட்டல், மதுபான விடுதி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி கட்டாயப்படுத்தினார். இது தொடர்பாக அனில் தேஷ்முக்கின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி ஆதாரங்களை அழிக்கும் முன்பு அவற்றை கைப்பற்றும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் போலீசார் நியமனம், பணியிட மாற்றத்திலும் மந்திரி அனில் தேஷ்முக் முறைகேடுகளில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை சி.பி.ஐ.க்கு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,
தாத்ரா நகர் ஹவேலி தொகுதி எம்.பி. மோகன் தேல்கர் எம்.பி. தற்கொலை வழக்கில் பா.ஜனதா தலைவர்களை சிக்க வைக்குமாறு என்னை வற்புறுத்தினார்.
போலீசாரின் செயல்பாடுகளில் அடிக்கடி குறுக்கிட்டதோடு, அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். அவர் மீது உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோர்ட்டு, மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி பரம்பீர் சிங்கை அறிவுறுத்தியது.
இதையடுத்து அவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரம்பீர் சிங்கின் மனுமீது விரைவில் விசாரணை நடைபெற இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் பரம்பீர் சிங் எழுதியுள்ள கடிதத்தில் அவரது கையெழுத்து இல்லை என்றும், இந்த கடிதத்தை அவர்தான் எழுதி அனுப்பினரா என்பது குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.