பங்குனி பால் மாங்காய் உற்சவம் !!!
ஆலவாயில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் கொண்டாடும் உற்சவங்களில் பங்குனி பால்மாங்காய் உற்சவமும் ஒன்று !!! அது என்ன பால் மாங்காய் ??? முன்பின் கேட்டிராத பெயராக இருக்கிறது அல்லவா ?! அதனைப் பற்றித்தான் இப்பதிவு !!!
பார் புகழும் மதுரையில் பன்னிரு மாதங்களும் திருவிழா தான் !!! அதுவும் பங்குனி மாதம் என்பது மீனாட்சி சுந்தரேஸ்வராளுக்கு படு பிஸியான மாதம் என்றே சொல்லலாம் !!! பங்குனி கோடை வசந்தன் உற்சவம், பால் மாங்காய் உற்சவம், பங்குனி உத்திரம் பொன்னனையாள் உற்சவம், திருப்பரங்குன்றம் சுப்ரமண்யர் திருக்கல்யாணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக வருசையாக உற்சவங்கள் !!! இந்த லிஸ்டில் அதிகம் பேருக்கு தெரியாத ஒன்று பால் மாங்காய் உற்சவம் !!!
பாரத தேசத்தில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் சீதோஷ்ண (தட்ப வெட்ப) நிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று !!! நம் நாட்டுக்கே வளத்தை உண்டுபண்ணுவது அதுதான் !!! இப்படி வரப்பிரசாதமாக நமக்கு கிடைக்கப்பெற்ற காலநிலைகளுக்கு ஏற்றவாறு நாம் உண்ணும் உணவும் அருமையாகவும் அருமருந்தாகவும் அமையப்பெற்றுள்ளது !!!
உணவை வெறும் ஏனோதானோ என்று எண்ணாமல் வாழ்வியலில் ஒரு அங்கமாக, தெய்வீகத்தன்மை பொருந்திய ஒரு பொருளாக, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வஸ்துவாக பாவித்து அதற்கென தனியே உற்சவங்கள் கொண்டாடியுள்ளனர் நம் பெரியோர்கள் !!! அதில் ஒன்று தான் இந்த பங்குனி பால் மாங்காய் உற்சவம் !!!
கோடை காலத்தின் துவக்கமாம் பங்குனி மாதத்தில், பெரும் சுவையோடு கூடிய மருந்தாக அமைவது இந்தப் பால் மாங்காய் !!! தேங்காய், மாங்காய், வெல்லம், மிளகுதூளும் கூடவே சுண்டக்காய்ச்சிய பாலும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பதார்த்தத்தை மதுரையில் சுவாமி அம்பாளுக்கு நிவேதனம் செய்து வரும் பக்தர்களுக்கு விநியோகிப்பதே இந்த பால் மாங்காய் உற்சவம் !!!
இது ஒரு காலத்தில் எல்லோர் வீடுகளிலும் வழக்கில் இருந்த ஒன்றே !!! குறிப்பாக இதனை பங்குனி உத்திர நாளில் ஒரு விசேஷ பண்டிகை தளிகையாக செய்த உண்ட சான்றுகள் நமக்கு கிடைக்கிறது !!! இன்று பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து போன இது, மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற சில திருக்கோவில்களில் தயாரிக்கப்பட்டு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது !!!
ஒருமுறை செய்தால் ஒருமாத காலம் வரை கெடாமலும், மிகுந்த ருசியுடனும் இருக்கும் இப்பால்மாங்காயை வரும் பங்குனி உத்திர நாளில் வீட்டில் செய்து சுவாமி அம்பாளுக்கு நிவேதனமாக படைத்தது நாமும் உட்கொண்டு மகிழ்வோமாக !!!
செய்முறை :
ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு, ஜீரகம் தாளித்து, அதன் மீது சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காயும் மாங்காயும் சேர்த்து சற்றே வதக்கி அதன் மீது சிறிது தண்ணீர் விட்டு வேகவைக்கவும் !!! (சிலர் இந்த இடத்தில் வேகவைத்த பலாக்கொட்டைகளும், பலாச்சோலைகளையும் சேர்க்கும் வழக்கம் உள்ளது !!!) வெந்தவுடன் பொடிசெய்த வெல்லம் சேர்த்து கரையவிட்டு அதன் மீது சுண்டக்காய்ச்சிய பாலை சற்று ஊற்றி மிளகுத்தூள் தூவி கலக்கினால் பால் மாங்காய் தயார் !!!