இந்திரா பஞ்சாயத்துக்குப் பத்து லட்சம் பரிசு…
பத்து வருடங்களாக எந்த விதமான தீண்டாமை வழக்குகளும் பதிவு செய்யப்படாமல், சாதிப் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்தும் கிராமத்தினை ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து பத்து லட்ச ரூபாய் பரிசு வழங்கி வருகிறது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சகம்.
இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமப்பஞ்சாயத்து இந்த விருதினைத் தட்டிச்செல்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரியிடமிருந்து பெருமையுடன் பெற்றுக்கொண்டார் கிராம பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. இந்திரா.
இக்கிராமத்தில் பல்வேறு சாதியினரும் மிகவும் ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் எவ்வித பாகுபாடும் காட்டாமலும் வாழ்ந்து வருகின்றனர். அதனைப் பாராட்டியே இவ்விருது வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
இவ்விருதினை பெற்றுக்கொண்ட கிராம பஞ்சாயத்துத்தலைவர் இந்திரா, “இனி வரும் காலங்களிலும் இதே ஒற்றுமையைப் பாதுகாத்து வளர்த்து வருவதே எனது முதல் கடமையாகும்” என்று மகிழ்வுடன் கூறியுள்ளார்.
– லெட்சுமி பிரியா