மும்பை:

பாஜக எம்.பி. சிந்தமன் வனகா மறைவு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ள பால்கர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள பாஜக கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளது.

முதன் முறையாக இந்த தொகுதியில் பாஜக.வும் சிவசேனாவும் நேரடியாக தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி மோதுகின்றன. பெரிய முதலைகள் மோதும் இந்த தொகுதியை சத்தமில்லாமல் கைப்பற்றும் முயற்சியை பகுஜன் விகாஸ் ஆஹாதி கட்சி மேற்கொண்டு வருகிறது.

இக்கட்சி தலைவர் ஹிதேந்திர தாகூர் கூறுகையில், ‘‘கடந்த 4 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக.வும், சிவசேனாவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்கின்றன. ஆனால் மக்களுக்காக அவர்கள் செய்த ஒரு பணியையாவது காட்ட வேண்டும். நாங்கள் இந்த ஆண்டு முழுவதும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு புல்லட் ரெயில் தேவையில்லை. இதை 5 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தவுள்ளனர். இதற்கு பயன்படுத்தும் ரூ.1 லட்சம் கோடி நிதியை ஏற்கனவே உள்ள நகர்புற ரெயில் திட்டத்தில் செலவிட வேண்டும்.

பால்கர் தொகுதி மக்கள் கல்வி அறிவு பெறாதவர்கள். ஆனால் கலாச்சாரம் அறிந்தவர்கள். அவர்களுக்கு பணத்தை செலவு செய்தும், அரசு எந்திரத்தை பயன்படுத்தியும் வெற்றி பெற பாஜக செயலாற்றி வருகிறது. இந்த தேர்தலில் பணம் செலவு செய்ய வரையறை இல்லாத நிலை உள்ளது. இது போன்று பணம் விநியோகம் செய்யப்படுவதை நான் எங்குமே பார்த்தது கிடையாது. இவர்களுக்கு எப்படி பணம் வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘நன்னடத்தை விதிகள் என்று அழைப்பதில் அர்த்தமில்லாமல் போய்விட்டது. சுவரொட்டிகள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்ப டுகிறது. இந்த அதிகாரிகள் தேர்தலில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். செய்ய மறுத்தால் தேர்தல் முடிந்த பின்னர் இடமாற்றம் செய்யப்படுவார்கள். சிவசேனாவிடம் வேட்பாளர் இல்லை. பாஜக.வில் இருந்து அவர்கள் இறக்குமதி செய்துள்ளனர். காங்கிரஸில் இருந்து பாஜக வேட்பாளர்களை இறக்குமதி செய்கிறது.

பாஜக முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறிய ஒருவரின் கண்ணுக்கு திடீரென அவர் புனிதம் பெற்றவராக தெரிகிறார். அதனால் பாஜக.வும் சிவசேனாவும் அவர்களுக்கும் போட்டியிடுவது எனக்கு ஒரு பிரச்னை கிடையாது. இந்த தொகுதியில் உள்ள 17 லட்சம் வாக்காளர்களில் 8 லட்சம் பேர் ஓட்டு போடுவார்கள். இதில் எங்களது வேட்பாளருக்கு 3.5 லட்சம் ஓட்டு கிடைக்கும். இதர வாக்குகளை பாஜக, சிவசேனா, காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள். அதனால் எங்களது வேட்பாளர் அருகில் கூட யாரும் வர முடியாது’’ என்றார்.