மதுரை: பொங்கலையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இன்று மாலை நிறைவடைந்தது. இந்த போட்டியில் 44 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் நாளான (ஜனவரி 14) அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க களமிறங்கினர். இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 1000-க்கும் பேற்பட்ட காளைகள் மற்றும் 900-ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர். மொத்தம் 10 சுற்றுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 10 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் களம் கண்டன.
இந்த போட்டியில், நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி மஞ்சம்பட்டி துளசி 2 ஆம் இடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 மாடுகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்த பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபா என்ற மாடுபிடி வீரருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை சத்திரபட்டி விஜயாதங்கபாண்டி என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான இரண்டாவது பரிசு சின்னப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பசு, கன்று பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான மூன்றாவது பரிசு குருவித்துறையை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கு விவசாய கருவி பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் சிறந்து விளங்கிய காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது.
(G 64 ) – நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை பிடித்து முதலிடம்
(L 37) – மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை பிடித்து இரண்டாமிடம்
(O 235 ) – பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபா 11 காளைகளை பிடித்து மூன்றாமிடம்
(P 353) – பெரிய ஊர்சேரியைச் சேர்ந்த பால்பாண்டி 9 காளைகளை பிடித்து நான்காமிடம்