இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப்பை தகுதி நீக்கம் செய்து  இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலை அனுமதி (work permit) விவகாரத்தை மறைத்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, அவரை தகுதி நீக்கம் செய்து இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாக இருப்பவர் கவாஜா ஆசிப்.  2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் என்.ஏ-110 தொகுதியில் போட்டியிட்டு வென்று தேசிய சபைக்கு  தேர்வானர். அவரை எதிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் தார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இக்மா எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டின் பணி அனுமதி (work permit) கவாஜா ஆசிப்பிடம் இருக்கிறது. ஆனால், அவர் வேட்புமனுவில் அதனை மறைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆசிப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உஸ்மான் தார் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. ஹவாஜா ஆசிப் இக்மா வைத்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதன் விபரங்களை வேட்புமனுவில் மறைத்துள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால், அவர் தனது பதவியை இழந்துள்ளார். ஏற்கனவே, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நிதி மந்திரி ஆகியோர் பணாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது கடந்த 2016ம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது,   பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், அந்த நாட்டை அணுகுண்டால் அழிப்போம் என்றும், ஷோகேஸில் வைப்பதற்காக நாங்கள், அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கவில்லை என்று  மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.