முசாஃபராபாத்
விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட முகமது ரசாக் சவுத்ரி என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்திய விமானபடை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் வசித்து வந்த முகமது ரசாக் சவுத்ரி என்னும் 58 வயது முதியவர் இதை நேரில் கண்டுள்ளார். அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
ரசாக் தனது பேட்டியில், “நான் நேற்று காலை சுமார் 8.45 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன். அபோது இரண்டு விமானங்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டேன். அதில் ஒன்று காஷ்மீர் எல்லைக்குள் விழுந்தது. மற்ற விமானம் வெடித்து சிதறியது. எனது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் அந்த விமான பாகங்கள் விழுந்தன.
அப்போது பாராசுட் மூலம் ஒருவர் மெதுவாக கீழே இறங்குவதை கண்டேன். எனது வீட்டுக்கு தென் புறம் இருந்த ஒரு சிறு நீர்க்குட்டையில் அது இறங்கியது. அந்த விமானி பத்திரமாக கீழே இறங்கினார். நான் உடனடியாக எனது ஊர் இளைஞர்களை அழைத்தேன். ராணுவத்தினர் வரும் வரை உடைந்த விமானத்தின் அருகில் செல்லக் கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.
ஆனால் அவர்கள் அந்த விமானியை சூழ்ந்துக் கொண்டனர். கையில் துப்பாக்கியுடன் இருந்த அந்த விமானி இளைஞரகளிடம் இது இந்தியாவா இல்லை பாகிஸ்தானா என கேட்டுள்ளார். ஒரு இளைஞர் சாமர்த்தியமாக இந்தியா என பதில் அளித்துள்ளார். அவர் உடனே இந்திய ஆதரவு கோஷங்களை எழுப்பினார். அதன் பிறகு இந்தியாவில் இது எந்த இடம் என கேட்டார்
அந்த விமானியிடம் அதே இளைஞர் கில்லா என பதில் அளித்தார். அவரிடம் விமானி தனது முதுகில் காயம் உள்ளதாகவும் குடிக்க நீர் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அவருடைய இந்திய ஆதரவு முழக்கத்தினால் ஆத்திரம் அடைந்த மற்ற இளைஞர்கள் அவர் மிது கற்களை வீசி தாக்கினர். விமானி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட்டபடி பின்னே ஓடினார்.
அவரை இளைஞர்கள் துரத்தினர். அவர் சுமார் அரை கிமீ தூரம் வானத்தில் சுட்டபடி ஓடினார். அத்துடன் அருகில் இருந்த நீர் குட்டையில் குதித்த அவர் தன்னிடம் இருந்த ஆவணங்களை வாயில் போட்டு மென்றார். மற்றவைகளை நீரில் முழ்கடித்து விட்டார். இளைஞர்கள் அவரை துப்பாக்கியால் கீழே போடும்படி சொல்லிக் கொண்டிருந்த போதே ஒரு இளைஞர் விமானியின் காலை தாக்கினர்.
அதன் பிறகு குட்டையை விட்டு வெளியே வந்த விமானி தன்னை கொல்லக் கூடாது என கேட்டுக் கொண்டர். அவரை இருபக்கமும் பிடித்து இளைஞர்கள் இழுத்துச் சென்றனர். ஒரு சிலர் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களுடன் அவரை தாக்கினர். நாங்கள் இடையில் புகுந்து விமானியை காப்பாற்றினோம். அப்போது அங்கு வந்த ராணுவம் அவரை அழைத்துச் சென்றது.” என தெரிவித்துள்ளார்.