ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில், மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 60 பந்துகளில் 91 ரன்கள் அடித்து, இறுதிவரை நாட்அவுட்டாக நின்றார். ஷர்ஜீல் கான் 18 ரன்களில் அவுட்டானார். கேப்டன் பாபர் ஆஸம், 46 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ஃபக்கர் ஸமான் டக்அவுட்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி, 165 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளும், ஜிம்பாப்வேயின் லூக் ஜாங்வேவுக்கே கிடைத்தன.
பின்னர், 166 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் வெஸ்லே மெட்வியர் 47 பந்துகளில் 59 ரன்களை அடித்தார். மருமானி 35 ரன்களையும், பிரெண்டன் டெய்லர் 20 ரன்களையும் அடித்தனர்.
ஆனால், தேவையான அதிரடி ஆட்டத்தை யாரும் ஆடாத காரணத்தால், அந்த அணியால், 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழநது 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 தொடரை இழந்தது.
பாகிஸ்தானின் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.