ஸ்ரீநகர்: பஹல்காம்  பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து,  ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.  இது இந்தியர்களுடையே ஆத்திரத்தை  ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி (22.04.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 28 போ் உயிரிழந்தனா். இத்தாக்குதல் நாடுமுழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது.

 அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மறுநாள் பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடா்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் இருத்தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதோடு ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கும், இந்தியராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சில இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக நள்ளிரவு அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் ​​மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள்  தெரிவித்தனர். இருப்பினும் இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து நான்காவது இரவும் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர். “ஏப்ரல் 27-28 இரவு, குப்வாரா மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களுக்கு எதிரே உள்ள பகுதிகளில், பாகிஸ்தான் இராணுவ நிலைகள் கட்டுப்பாட்டுக் கோட்டில் சிறிய ரக துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கின,” என்று இந்திய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, மேலும் அவர்கள் “விரைவாகவும் திறம்படவும்” பதிலளித்தனர். பூஞ்ச் ​​பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது இதுவே முதல் முறை.

ல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறல்கள் இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.