லாகூர்:
தகவல் அறியும் உரிமை சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசின் நடவடிக்கைகளை நாட்டு குடிமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியா உள்பட பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் பல ஊழல்கள், தில்லுமுல்லு நடவடிக்கைகள் என பல திரை மறைவு வேலைகள் இச்சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானும் இணைந்துள்ளது. இச்சட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக காணாமல் போகும் ஒரு நபர் விசாரணை முகமைகளால் கஸ்டடி எடுக்கப்பட்டிருந்தால் அதை 3 நாட்களுக்குள் விபரம் அளிக்க வேண்டும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்ப்டடுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுக்கு எதிராக பொது நல நோக்கத்தோடு குரல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு அளிப்பது, சட்ட உதவிகளை மேற்கொள்ளவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்படுகிறது. 20 ஆண்டுகள் வரையிலான பதிவேடுகள் மூலம் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு மு ந்தைய தகவல்கள் அனைத்து துறை இணையதளத்தில் கண்டிப்பாக வெளியிட்டு விட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த செனட் குழுத் தலைவர் பர்கத்துல்லா பாபர் கூறுகையில்,‘‘ தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பாதுகாப்பு முகமைகள் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு அது குறித்த தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதை மன்னிக்க முடியாது. எந்த விதத்திலும் மனிதனின் அடிப்படை உரிமை குறித்த தகவல்களை அளிக்காமல் புறக்கணிக்கப்படக் கூடாது’’ என தெரிவித்தார்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதம் மற்றும் சட்டமாக நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளியுறவு துறை அமைச்சர் மரியர் அவுரன்சீப் கூறுகையில்,‘‘பாதுகாப்பு படை மற்றும் வெளிநாடு தொடர்புடைய சர்ச்சையான தகவல்களை இச்சட்டத்தின் கீழ் வழங்க இயலாது’’ என தெரிவித்துள்ளார்.