
கராச்சி: மனரீதியாக துன்புறுத்தல் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்.
தற்போது 28 வயதாகும் முகமது அமீர், பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் வாரியம், தனக்கு அளித்த உளரீதியான சித்ரவதைகளால்தான், தான் இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, இது அவரின் தனிப்பட்ட முடிவு என்று கருத்து கூறியுள்ளது.
முகமது அமீர் கூறியுள்ளதாவது, “நான் உளரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். என்னால், இந்தக் கொடுமையை தாங்க முடியவில்லை.
கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டுவரை எனக்கு இந்த சித்ரவதை நிகழ்ந்த காரணத்தால், நான் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்தேன். நான் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவித்தேன்” என்றுள்ளார் அவர்.
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, முகமது அமீருக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.