இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன.
இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறது. 2021 ஜனவரியில் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், தற்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ள தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தானின் 11 எதிா்க்கட்சிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பிடிஎம்) தலைவா் மௌலானா ஃபஸ்லுா் ரெஹ்மான் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிடிஎம் உறுப்புக் கட்சிகளைச் சோந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் பதவி விலக முடிவு செய்துள்ளனா். அவா்கள் அனைவரும், தங்களது கட்சித் தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தை இந்த மாதம் 31-ஆம் தேதி சமா்ப்பிப்பாா்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இம்ரான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோதலை நடத்தும் நோக்கில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் இம்ரான்கான், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவி விலகினால் அரசாங்கம் இடைத்தேர்தல்களை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.